+2-ல் உயிரியல் படிக்காமலும் மருத்துவராகலாம்! நீட் தேர்வில் புதிய மாற்றங்கள் அறிவிப்பு
இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத, 12 ஆம் வகுப்பில் உயிரியல் படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பில் உயிரியல் படிக்காமல், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் உயிரியல் (Biology) படிக்காதவர்களும், இனி மருத்துவர் ஆகலாம். பத்தாவது முடித்த உடன், பதினொன்றாம் வகுப்பில் என்ன குரூப் சேர்வது என்று பலருக்கும் குழப்பம் இருக்கும். உயிரியல் பிரிவில் சேர்ந்தால், மருத்துவ துறையை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்கும். ஆனால், மற்ற குரூப்களில் சேர்ந்தால், மருத்துவம் படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போகும். இந்நிலையில், தற்போது தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல் படி, உயிரியல் பாடத்தைத் தேர்வு செய்யாத மாணவர்களும் மருத்துவம் அல்லது பிடிஎஸ் (பல் சார்ந்த படிப்பு) படிப்பில் சேர முடியும். அதாவது நீட் நுழைவுத் தேர்வை எழுதலாம். ஆனால், பிளஸ் 2-வுக்கு பிறகு உயிரியல் அல்லது பயோ டெக்னாலஜி பாடங்களை கூடுதல் பாடமாக படிக்க வேண்டும். தனியாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் கீழோ, உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்பவியல் பாடங்களை எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத, 12 ஆம் வகுப்பில் உயிரியல் படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்ற அறிவிப்புக்கு கல்வியாளர்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இரண்டு ஆண்டுகள் முழு நேரமாக உயிரியல் படிப்பதற்கும், பகுதி நேரமாக படித்து தேர்ச்சி பெறுவதற்கும் வித்தியாசம் இருப்பதாக கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் எந்த பிரிவை தேர்ந்தெடுத்தாலும், விருப்பப் பாடங்களை தேர்வு செய்து கொள்ளும் வகையில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் நீட்சியாகவே தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய மாற்றம் பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கவில்லை. இந்நிலையில், நீட் போன்று நுழைவுத் தேர்வு மூலம், புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் நிர்பந்தம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

image