10 ரூபாய்க்கு ஆவின் பால் பாக்கெட்.. இன்று முதல் விற்பனை தொடக்கம்பால்வளத்துறையின் கட்டுப்பாட்டில் ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் அதிக கொழுப்பு, நடுத்தர கொழுப்பு, குறைந்த கொழுப்பு என்ற 3 வகைகளில் மக்களுக்கு தேவையான பால் பாக்கெட்டுகள் பல்வேறு வண்ணங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த மே 9-ஆம் தேதி சென்னையில் விட்டமின் A மற்றும் D செறிவூட்டப்பட்ட 500 மில்லி ஆவின் டிலைட் பால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஊதா நிற பால் பாக்கெட் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, 4.5% கொழுப்பு சத்து கொண்ட ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்தவும், அதற்கு பதிலாக 1% கொழுப்புச் சத்து குறைவான ஊதா நிற பாக்கெட் விற்பனையை அதிகரிக்க போவதாக அறிவிப்பு வெளியானது. இதற்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து, ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டில் இருக்கும் கொழுப்பு இன்றைய மக்கள் வாழ்க்கைக்கு ஏற்புடையதாக இல்லை எனவும், வளரும் குழந்தைகளுக்கு ஏற்ப கொழுப்பு சத்துடன் கூடிய ஊதா நிற டிலைட் பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது லாப நோக்கமின்றி மக்கள் சேவைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கமளித்தார்.இந்த சூழலில், ஆவின் 500 மி.லி., டிலைட் பால் ரூ. 21, 200 மி.லி., டிலைட் பால் ரூ.10-க்கும் இன்று முதல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 10,000 பால் பாக்கெட் என முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.