சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம்.. 3 மாதங்கள் பெய்ய வேண்டிய மழையை விட 2 நாட்களில் அதிக மழை பதிவு!
சென்னையில் வரலாறு காணாத வகையில் 3 மாதங்களில் பெய்ய வேண்டிய சராசரி மழையை விட 2 நாட்களில் அதிக மழை பெய்துள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார். ஆறுகளில் படிப்படியாக நீர்மட்டம் குறைவதாகவும், 80 சதவீதம் அளவுக்கு மின் விநியோகம் சீர் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தொடர்ந்து 48 மணி நேரம் பெய்த மழையால் சென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.பெருங்குடி, வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் போன்ற பகுதிகள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளதாகவும், அப்பகுதிகளில் தண்ணீர் வடிய ஓரிரு தினங்கள் ஆகும் என தெரிவித்தார்.
இங்குள்ள மக்களுக்கு காசிமேட்டில் இருந்து 25க்கும் மேற்பட்ட படகுகள் வரவழைத்து பால், தண்ணீர், பிரேட் மற்றும் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது எனவும் மேலும் வீட்டை விட்டு வெளியே வர தயாராக உள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர் என்றும் அவர் கூறினார்.