அடுத்த கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வழங்கிய பாலா.. மனம் குளிர்ந்த மலைகிராம மக்கள்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, மலை கிராம மக்களுக்காக இலவச ஆம்புலன்ஸ் வழங்கி சின்னத்திரை நடிகர் பாலா மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.ஆலங்காயம் ஒன்றியத்தைச் சேர்ந்த நெக்னாமலை கிராமம், கடல் மட்டத்திலிருந்து 1,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 172 குடும்பங்களில் சுமார் 750 பேர் வசிக்கும் நிலையில், இன்று வரையிலும் அப்பகுதிக்கு முறையான சாலைவசதி இல்லாததால், அன்றாட தேவைக்கும், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கும் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும், கர்ப்பிணிகள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை டோலி கட்டி அதன் மூலம் சுமந்து செல்ல வேண்டிய அவலம் நிலவுகிறது. இதுதொடர்பான செய்தி வெளியான நிலையில் இதனை அறிந்த நடிகர் பாலா, நெக்னாமலை கிராமத்திற்கு நேரில் சென்று உதவினார்.முன்னதாக, நெக்னாமலை கிராமத்துக்கு சென்ற பாலாவுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை அடுத்து, மருத்துவத் தேவைக்கு உரிய வாகன வசதியின்றி அவதிப்படும் மக்களுக்கு உதவிடும் வகையில், பாலா தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் ஒன்றை நன்கொடையாக வழங்கினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் பாலா, கர்ப்பிணிகளை பிரசவத்திற்காக டோலி கட்டி இரவு நேரத்தில் தீப்பந்தங்களுடன் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்வதை அறிந்து கவலை அடைந்ததாகவும், இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றியதால் ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளதாக கூறினார்.தன்னிடம் போதிய பணம் இருந்திருந்தால் நெக்னாமலை கிராமத்துக்கு சாலை வசதியே செய்து கொடுத்திருப்பேன் என்றும் நடிகர் பாலா தெரிவித்துள்ளார். இதன் பின்னணியில் தனக்கு பதவி ஆசை எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இலவச ஆம்புலன்ஸ், இலவச ஆட்டோ உள்ளிட்டவை வழங்கி மக்களுக்கு உதவி வரும் சின்னத்திரை நடிகர் பாலா நெல்லை வெள்ளத்தின் போது மக்களுக்கு நிவாரணம் வழங்கி உதவினார். சின்னத்திரை நடிகர் பாலா இலவசமாக மக்களுக்கு வழங்கும் 5ஆவது ஆம்புலன்ஸ் இதுவாகும்.