பொங்கலின் மணமும் சுவையும் கூடும்; அனைத்து வீடுகளிலும் அகப்பை! அன்பளிப்பாக வழங்கும் தச்சுக் கலைஞர்கள்
தஞ்சாவூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் தை திருநாளன்று பொங்கலிட... சில்வர், பித்தளை உள்ளிட்ட உலோக கரண்டி பயன்படுத்தாமல், பாரம்பர்யத்தைக் கடைப்பிடிக்கும் விதமாக, அனைத்து வீடுகளிலும் அகப்பை பயன்படுத்துகிறார்கள். பல தலைமுறைகளாக இந்தப் பாரம்பர்யம் காக்கப்படுவதைச் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மக்கள் ஆச்சர்யம் பொங்க பாராட்டுகிறார்கள்.
தஞ்சாவூரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, வேங்கராயன்குடிகாடு கிராமம். நெல், நிலக்கடலை, உளுந்து, சோளம் உள்ளிட்ட பயிர்கள் செழிப்பாக விளைகின்ற பசுமையான கிராமம் இது. இக்கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை பாரம்பர்ய முறையில் விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இங்குத் தச்சுத் தொழில் செய்யக்கூடிய விஸ்வகர்மா சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பொங்கல் தினத்தில் கிராம மக்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, அகப்பை தயாரித்து வீடு வீடாகக் கொடுக்கும் பாரம்பர்ய வழக்கம் இன்றைக்கும் தொடர்கிறது. பொங்கல் கிண்டுவதற்கும், பரிமாறுவதற்கும் அந்த அகப்பையைத்தான் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
