40 வயதை பெண்கள் நெருங்கும்போது என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும்...

பெண்களுக்கு ஏற்படும் மிக முக்கியப் பிரச்சினையே ஊட்டச்சத்து குறைபாடு தான். அதிலும் 40 வயதைக் கடந்துவிட்டால் எலும்புத் தேய்மானம், மெனோபஸ் ஆகிய பிரச்சினைகள் வர ஆரம்பித்துவிடும். அவற்றை சமாளிக்க 40 வயதைக் கடந்த பெண்கள் என்ன மாதிரியான உணவு முறையை (டயட்) பின்பற்ற வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

40 வயதைத் தாண்டும் பெண்கள் முதலில் சந்திப்பது ஹீமோகுளோபின் பிரச்சினை. அதாவது ரத்த அணுக்கள் குறைவாக இருப்பது. அதையடுத்து எலும்புத் தேய்மானம், அடுத்த சில வருடங்களில் மெனோபஸ் பிரச்சினை போன்ற பிரச்சினைகள் ஆரம்பிக்கும். இதில் மெனேபஸ் தவிர மற்ற எல்லாமே இரும்புச்சத்து, கால்சியம் போன்ற ஊட்டச்சத்து பற்றாக்குறையினால் தான். அதைத் தவிர்க்க கீழ்வரும் உணவுமுறையை நீங்கள் பின்பற்றலாம்.

காலையில் இட்லி, மதியம் அரிசி சாதம், திரும்ப இரவில் தோசை அல்லது சப்பாத்தி. இதுதான் நம்முடைய அன்றாட உணவாக இருக்கிறது. இவை அனைத்துமே ரீஃபைண்ட் செய்யப்பட்ட அரிசி, கோதுமை போன்றவற்றிலிருந்து கிடைப்பது. அதற்கு பதிலாக குறைந்த கார்போ அளவும் நார்ச்சத்தும் கொண்ட ஏதாவது ஒரு முழு தானியத்தை தினமும் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக அதிகமாக பழங்கள் எடுத்துக் கொள்வது கோடை காலத்தில் தான். கோடைகாலத்தில் தான் வெயிலின் காரணமாக உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும்.
அப்போது அதிகமாக பழங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். குளிர் மற்றும் மழைக்காலங்களில் பழங்கள் சாப்பிட்டால் சளி, ஜலதோஷம் உண்டாகும் என ஒரு கருத்து காலங்காலமாக நம்மிடையே இருந்து வருகிறது.

ஆனால் பழங்கள் நம்முடைய அன்றாட உணவில் கட்டாயம் ஒரு பாகமாக இருக்க வேண்டும்.

நம்முடைய தினசரி உணவில் 13 முதல் 18 சதவீதம் வரையிலும் பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

அதிலும் குறிப்பாக பெண்களுடைய உணவில் பழங்கள் இன்றியமையாத ஒன்று. குறைந்தபட்சம் தினமும் ஏதாவது ஒரு பழமாவது உணவில் சேர்க்கப் பாருங்கள்.

​கொழுப்பு குறைவான மாமிசம்

அசைவ உணவுகளைச் சாப்பிடலாம். ஆனால் 40 வயதுக்கு மேல் அதிக கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகள் எடுத்துக் கொள்வது உடலில் ரத்த அழுத்தம், நீரிழிவு, கொலஸ்டிரால் போன்ற பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.
அதனால் லீன் மீட் என்று சொல்லப்படுகிற சிக்கன், அடுத்ததாக கடல் உணவுகள், முட்டை போன்றவற்றை வாரத்தில் இரண்டு நாட்களாவது குறைந்தபட்சம் எடுத்துக் கொள்ளுங்கள்.

முட்டை தினமும் கூட 1 சாப்பிட்டு வரலாம்.

ஊட்டச்சத்துக்கள்:
பெண்களுக்கு மிக அதிகமாக ஏற்படுகிற சில ஊட்டச்சத்து பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்தி செய்தாலே பெரும்பாலான உடல் கோளாறுகளைத் தவிர்த்துவிட முடியும்.


குறிப்பாக கால்சியமும் இரும்புச் சத்தும் மிக அடிப்படையாகப் பெண்களுக்குத் தேவைப்படுகிற ஊட்டச்சத்துக்கள்.

அடுத்ததாக, பொட்டாசியம், ஜிங்க், ஃபோலிக் அமிலங்கள், ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் கட்டாயமாக்கிவிட்டாலே போதும் ஊட்டச்சத்து பற்றாக்குறையும் ஏற்படாது.40 வயதுக்குமேல் உண்டாகிற மூட்டுவலி, இதய நோய்கள், எடை கூடுவது குறைவது போன்ற பல பிரச்சினைகளில் இருந்து தப்பித்துவிட முடியும்.

உடற்பயிற்சி:
உடற்பயிற்சியெல்லாம் இளைஞர்கள் செய்வது, 40 வயதுக்கு மேல் எப்படி உடற்பயிற்சி செய்ய முடியும் போன்ற பல கேள்விகள் உங்களுக்கு இருக்கலாம்.

அவையெல்லாம் சோம்பேறித்தனத்தின் வெளிப்பாடு.

முதலில் உங்களை நீங்கள் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அதுவே பாதி பிரச்சினைகளை இல்லாமல் ஆக்கிவிடும்.