அசத்தல் ஐடியா.. கிணற்றில் யார் விழுந்தாலும் வலை தானாக விரிக்கும்.. சென்சாரை வைத்து கலக்கும் பள்ளி மாணவர்கள்!
Rescue Tools| கிணற்றில் தவறி விழும் மாடுகள் மற்றும் மனிதர்களை மீட்க விருதுநகர் மாணவிகள் புதிய கருவிகளை கண்டுபிடித்துள்ளனர்.இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயம் உள்ள நிலையில், அனைத்து இடங்களிலும் நதி நீரை நம்பி விவசாயம் நடைபெறுவதில்லை. நதி நீர் கிடைக்க பெறாத இடங்களில் கிணற்று நீர் பாசனமே விவசாயத்திற்கு கை கொடுக்கிறது. அப்படி பட்ட கிணறுகள் முறையான பாதுகாப்பு இன்றி இருப்பதால் கிணற்றில் மனிதர்களும் , விலங்குகளும் தவறி விழுந்து உயிரிழப்பது அவ்வப்போது நடந்து வருகிறது.
கடந்த அக்டோபர், 2023 ல் நாமக்கல்லில் மகன் தந்தைக்கு கார் ஓட்ட கற்று தந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் விழுந்ததில் தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதே போன்று மாடுகளும் கிணற்றில் தவறி விழுந்து தீயணைப்பு படையினர் மாட்டினை போராடி மீட்ட செய்தியை படித்திருப்போம். தற்போது இதனை சுலபமாக்க விருதுநகர் மாவட்ட மாணவிகள் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் முயற்சியில் learning links foundation மற்றும் indusind bank பங்களிப்போடு மத்திய அரசின் அடல் டிங்கரிங் லேப் திட்டம் விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயின்றவர்கள் தான் அருப்புக்கோட்டை தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் லிதன்யா ஶ்ரீ மற்றும் சௌந்தர்யா.இதற்கென தனி மாதிரி கிணற்றில் உருவாக்கியுள்ள மாணவிகள் அதில் நீருக்கடியில் வலையை பொருத்தி வைத்துள்ளனர்.
யாராவது தவறி கிணற்றில் விழும் போது பக்கவாட்டு சுவரில் உள்ள சென்சார் அதை சென்ஸ் செய்து உடனே அந்த தகவலை மோட்டாருக்கு அனுப்பும் உடனே மோட்டார் நீருக்கடியில் உள்ள வலையை மேலே தூக்கி கிணற்றில் விழும் மாட்டை நீரில் இருந்து மேலே தூக்கும். மாடு மேலே வந்த உடன் அலாரம் அடித்து அருகில் உள்ளவர்களுக்கு கிணற்றில் யாரோ விழுந்துவிட்டார்கள் என எச்சரிக்கை செய்யும் வகையில் மாதிரி கிணற்றை வடிவமைப்பு செய்துள்ளனர்.
இப்படி அலாரம் அடிக்கும் போது அருகில் உள்ளவர்கள் உடனே இங்கு வந்து கிணற்றில் உள்ள மாட்டை மீட்பர் என்ற மாணவிகள் இனி வரும் காலங்களில் அருகில் ஆட்கள் யாரும் இல்லாத பட்சத்தில் அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தானாக குறுஞ்செய்தி அனுப்பும் வகையில் இதனை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்றனர்.