ஒரு முடிவோடுதான் இருக்காங்க! ஆண்டுக்கு 2 பொதுத் தேர்வு- 2 இந்திய மொழி கட்டாயம்- மத்திய பாஜக அரசு

டெல்லி: நாடு முழுவதும் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்தியில் ஆளும் பாஜக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

மத்திய அரசின் கல்வி கொள்கைகள் நாடு முழுவதும் கிராமப்புற, ஒடுக்கப்பட்ட, ஏழை எளிய மாணவர்கள் மீது பெரும் சுமையை சுமத்துவதாக இருந்து வருகிறது. மத்திய அரசின் கல்வி கொள்கையானது நகர்ப்புற வசதி படைத்த மாணவர்களுக்கானதாக உருமாற்றப்பட்டுள்ளது என்பது கல்வியாளர்களின் குற்றச்சாட்டு.
இதனடிப்படையில்தான் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது

நீட் நுழைவுத் தேர்வால் தமிழ்நாட்டின் பல்லாயிரக்கணக்கான ஏழை வீட்டு பிள்ளைகளின் மருத்துவ கனவு பறிக்கப்பட்டுவிட்டது. இந்த துயரத்தை தாங்க முடியாமல் அரியலூர் அனிதா தொடங்கி சென்னை ஜெகதீஸ் வரை மாண்டு போன மாணவர்கள் ஏராளம். இதனாலேயே நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு தொடர்ந்து போராடி வருகிறது.

இந்நிலையில் 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 பொதுத் தேர்வு நடத்தப்படவேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அப்படி 2 பொதுத்தேர்வு நடத்தப்படும் போது எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாமாம்.

மேலும் 11,12-ம் வகுப்பு மாணவர்கள் இனி 2 மொழிப் பாடங்களைக் கட்டாயம் படிக்க வேண்டுமாம். அதில் ஒன்று இந்திய மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்றும் மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இவை அனைத்தும் புதிய கல்விக் கொள்கைப்படி செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் ரத்து செய்துவிட்டன. ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்காக கல்விக் கொள்கையை உருவாக்குகின்றன. மேலும் கல்வி என்பது மாநிலப் பட்டியலுக்கே மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற குரலும் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

image