டெங்குவை குணப்படுத்தும் பப்பாளி இலை... அதன் எண்ணற்ற நன்மைகளை பற்றி தெரியுமா..?
டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு பப்பாளி இலைச்சாறு கொடுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சல், சோர்வு, தலைவலி, குமட்டல், தோல் வெடிப்பு மற்றும் வாந்தி ஆகியவை டெங்குவின் பொதுவான அறிகுறிகளாகும்.
வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படும் பப்பாளியில், பழம், இலை, விதை என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிறைந்ததாக இருக்கிறது. உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள் பப்பாளியில் நிரம்பியிருக்கின்றன.
பப்பாளி இலையில் உள்ள சத்துக்கள் : பப்பாளி இலை பாக்டீரியா எதிர்ப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பப்பாளி இலைச்சாறை அருந்துவதன் மூலம் உடலுக்கு தேவையான பிளேட்லெட் செல்களின் எண்ணிக்கையை (platelet count) அதிகரிக்க முடியும். இதில் செரிமானத்துக்கு உதவும் பாப்பேன் (papain) மற்றும் சைமோபபைன் (chymopapain) போன்ற நொதிகள் நிறைந்துள்ளது. இவை, வீக்கம் மற்றும் பிற செரிமான கோளாறுகளையும் தடுக்கிறது.
இதில் உள்ள ஆல்கலாய்டு கலவை (alkaloid compound), பொடுகு மற்றும் வழுக்கைக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது. இலைகளில் A, C, E, K மற்றும் B வைட்டமின்களும் இருக்கின்றன. பப்பாளி இலைகளில் டீ, ஜூஸ் ஆகியவற்றை தயாரித்து உடலுக்கு எடுத்துக்கொள்ளலாம். மேலும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான மாத்திரைகள் தயாரிப்பதற்கும் பப்பாளி இலை பயன்படுத்தப்படுகிறது.
