பிரதமர் இ பஸ் சேவை: தமிழ்நாட்டில் 11 நகரங்களுக்கு சூப்பர் ஆஃபர் - தட்டித் தூக்குமா தமிழக அரசு?

பிரதமர் இ பேருந்து சேவை திட்டத்தின் மூலம் சிறு நகரங்களில் மின்சார பேருந்துகள் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக 3000 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர்களை அடுத்த வாரம் வெளியிட மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

பிரதமர் இ பஸ் சேவை திட்டத்தின் கீழ் 3,000 பேருந்துகளுக்கான டெண்டர்களை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


பிரதமர் இ பஸ் சேவை திட்டத்தின் கீழ் 57,613 கோடி ரூபாய் மதிப்பில் 10,000 மின்சார பேருந்துகளை இயக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. போக்குவரத்து சேவையால் ஏற்படும் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் இந்த திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இந்த திட்டத்தை அமெரிக்காவுடன் இணைந்து மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் இ பேருந்து சேவை திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் உள்ள 169 நகரங்களில் இந்த இ பேருந்து சேவை வழங்கப்படவுள்ளது. அடுத்த ஐந்து மாதங்களில் இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.