தொடர்ந்து பெய்யும் கனமழை : மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமா உயருது - கர்நாடகா எவ்ளோ தண்ணீர் திறக்குது தெரியுமா?
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதில் கர்நாடக அரசு தொடர்ந்து கறார் காட்டி வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் என்னதான் உத்தரவு போட்டாலும், அதனை மதிக்காமல்தான் செயல்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றம் சென்ற பிறகுதான் ஓரளவு தண்ணீர் திறந்து வருகிறது. எனினும், தமிழகத்திற்கு வர வேண்டிய நியாயமான பங்கீடு நீர் சில மாதங்களாக கிடைக்கவில்லை.
தண்ணீரே திறக்காத கர்நாடகா
கர்நாடகாவின் காவிரிப் படுகையிலுள்ள அணைகளின் நிரம்பி இருந்தாலும் கர்நாடகம் கடந்த 3 மாதங்களாக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என விடாப்பிடியாக இருந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்த நிலையில், காவிரி டெல்டா பகுதிக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் அக்டோபர் 10ஆம் தேதி முதல் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டது.
கைவிடாத கனமழை
கர்நாடகம் கைவிட்டாலும் தமிழகத்தை கனமழை கைவிடவில்லை. கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகமாகவே உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு 30 அடியாக இருந்த மேட்டூர் அணையின் அளவு, தற்போது 60 அடியைத் தாண்டி முன்னேறி வருகிறது.
இதனிடையே நேற்று முன்தினம் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் கூடியது. தமிழகம் நிலுவையில் உள்ள தண்ணீரோடு தற்போதைய மாதத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரை திறக்க வலியுறுத்தியது. இதனை ஏற்றுக்கொண்ட காவிரி ஒழுங்காற்றுக் குழு தமிழகத்திற்கு டிசம்பர் இறுதி வரை நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 2700 கன அடி தண்ணீரை திறக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. அத்துடன் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான நிலுவை தண்ணீரையும் திறந்துவிட அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 98.58 அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 3846 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காகவும், பாசன வாய்க்காலிலும் திறந்துவிடப்படுகிறது. அதேபோல கபினி அணையில் இருந்து 424 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் விரைவில் தமிழக எல்லைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதே சமயம் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 64.20 அடியாக உயர்ந்துள்ளது. காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் அளவு சற்று குறைந்ததால் தண்ணீர் வரத்து வினாடிக்கு 3,829 கன அடியில் இருந்து வினாடிக்கு 3,760 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 27.91 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 250 கன அடி மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
