விஜயகாந்த் எப்படி இருக்கிறார்..? - பிரேமலதா வெளியிட்ட வீடியோ சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து அவரின் மனைவி பிரேமலதா தகவல் தெரிவித்துள்ளார்தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாக அண்மைக் காலமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். அத்துடன், வீட்டில் இருந்தபடியே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே, கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி தனது பிறந்தநாளை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வந்து, தொண்டர்களை பார்த்தார். அப்போது, விஜயகாந்தை நேரில் பார்த்த உற்சாகத்தில் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். இதையடுத்து, தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் விஜயகாந்த் கொண்டாடிய புகைப்படம் வெளியானதுகடந்த 18 ஆம் தேதி விஜயகாந்துக்கு தீவிர இருமல், காய்ச்சல், சளி பாதிப்பு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில், வழக்கான பரிசோதனை என்பதால் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அத்துடன், விஜயகாந்தின் உடல்நிலை குறித்த வீண் வதந்திகளை தொண்டர்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இருந்த போதும், மியாட் மருத்துவமனையில் விஜயகாந்திற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
விஜயகாந்த் உடல் நிலை சீராக இருப்பதாகவும், முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளும் நிலையாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்தின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புவதாகவும், அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
ஆனால், தீவிர இருமல் தொந்தரவால் அவதிப்படும் விஜயகாந்திற்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பைபாப் மாஸ்க் (Bipap Mask) எனப்படும் அழுத்தப்பட்ட ஆக்சிஜன் மூலம் கூடுதல் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், அடுத்தகட்ட சிகிச்சையை தொடர்வது குறித்து குடும்பத்தினருடன் மருத்துவக்குழுவினர் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டதுஇந்நிலையில், விஜயகாந்த் நலமுடன் உள்ளதாக அவரின் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், விஜயகாந்த் விரைவில் முழு உடல் தகுதியுடன் வீடு திரும்புவார் என்றும் கூறியுள்ளார்.