கனமழை, புயல்: தயாராக இருக்கும் மின் வாரிய ஊழியர்கள் - என்னென்ன ஏற்பாடுகள்?
வங்கக் கடலில் நாளை மறுநாள் புயல் சின்னம் உருவாக உள்ளது. மிச்சாங் என பெயரிடப்பட உள்ள இந்த புயல் வட தமிழகத்தை நோக்கி குறிப்பாக சென்னையை நோக்கி வர அதிக வாய்ப்புகள் உள்ளது.தொடர் கனமழை, புயல், சூறாவளிக் காற்று ஆகியவை ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட மாநில பேரிடர் மீட்புக்குழு கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்வாரிய ஊழியர்களும் தயார் நிலையில் உள்ளனர்சென்னையில் நேற்று முன் தினம் (நவம்பர் 29) குறுகிய நேரத்தில் சராசரியாக 15 செ.மீ. மழை பெய்த போதிலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மின் பராமரிப்பு பணிகள் ஜூலை 19ஆம் தேதி தொடங்கப்பட்டு நவம்பர் 29 வரை நடைபெற்று 11,47,103 பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
1545 துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 6,25,341 மரக்கிளைகள் மின்வழித்தடங்களில் இருந்து அகற்றப்பட்டது. 55,830 பழுதடைந்த மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டுள்ளது..சென்னையில் கடந்த 8 ஆண்டுகளில் கண்டிராத அளவு மிக கனமழை நேற்று முன் தினம் (நவம்பர் 29) பெய்த போதிலும், 240 துணை மின் நிலையங்களில் உள்ள 1,877 மின்பாதைகள் மூலம் தடையற்ற மற்றும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டது.
கனமழையினால் 8 மின்பாதைகளில் பழுது ஏற்பட்ட போதிலும் உடனடியாக மாற்றுப்பாதையில் சுமார் அரை மணி நேரத்தில் மின்னூட்டம் வழங்கப்பட்டு, பழுதுகளும் சரிசெய்யப்பட்டது. சென்னையில் உள்ள 41,311 மின்மாற்றிகளில் 2 மின்மாற்றிகளில் மட்டும் பழுது ஏற்பட்டது. அவைகளும் உடனடியாக பழுதுகள் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது.