விபத்து ஏற்படுத்தினால் ரூ.7லட்சம் அபராதம்.. வடமாநிலத்தில் நடக்கும் போராட்டம் ஏன் தெரியுமா? முழு விவரம்
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களுக்கு படையெடுத்தனர்மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த புதிய குற்றவியல் சட்ட பிரிவை எதிர்த்து, நாட்டின் பல்வேறு இடங்களிலும் லாரி உள்ளிட்ட கனரக ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டின் இறுதியில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்ட புதிய குற்றவியல் சட்டம் தான் தற்போது வடமாநிலங்களில் வெடித்துள்ள போராட்டத்திற்கு காரணம். அதாவது, மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த பாரதிய நியாய சன்ஹிதா எனப்படும் புதிய குற்றவியல் சட்டப்பிரிவின்படி, விபத்தை ஏற்படுத்தி ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமான ஓட்டுநர், காவல்துறையிடமோ அல்லது நீதித்துறையிடமோ சரணடையாமல், தப்பிக்க நினைத்து தலைமறைவானால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 7 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், பழைய குற்றவியல் சட்டமான இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 304 (A)ன் படி, விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடும் ஓட்டுநர்களுக்கு, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதத்துடன் கூடிய சிறை அல்லது அபராதம் மட்டுமே தண்டனையாக விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
விளம்பரம்
பழைய தண்டனை சட்டப்பிரிவை விட, பல மடங்கு அதிக சிறை தண்டனை மற்றும், 7 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டால், தெரியாத்தனமாக விபத்தில் சிக்கும் ஓட்டுநர்களின் வாழ்வையே முடக்கிவிடும் என்கிற கூற்றும் முன்வைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, பழைய சட்டப்பிரிவில் குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுனர் சில நாட்களில் ஜாமீன் பெற்று வெளியே வருவதற்கான வாய்ப்பு இருந்ததாகவும், ஆனால், புதிய சட்டப்பிரிவில் அந்த வாய்ப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்த அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். இதனால், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், சட்டீஸ்கர், பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தடைப்பட்டது. இதேபோன்று, மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீரிலும் பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் அலை மோதியது. மும்பையில் காய்கறி வரத்து முடங்கி, விலை அதிகம் வைத்து விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் பாதிப்படைந்தனர். ..
இதற்கிடையே, தமிழ்நாட்டில் இருந்து மத்திய பிரதேசத்துக்கு சரக்கு ஏற்றிச்சென்ற லாரி பல கிலோ மீட்டருக்கு முன்பே நிறுத்தப்பட்டதால், உணவு குடிநீர் கிடைக்காமல் தவிப்பதாக ஓட்டுநர்கள் தெரிவித்தனர். குறிப்பாக, பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களுக்கு படையெடுத்தனர். இதனால் பல கிலோ மீட்டருக்கு வாகனங்கள் சாரை சாரையாக சாலையை ஆக்கிரமித்தன.
மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், கறுப்புச் சட்டத்தை வாபஸ் பெறுங்கள் என்கிற முழக்கம் அனல் கிளப்பி உள்ளது. ஏற்கனவே திருத்தத்துடன் கொண்டுவந்த 3 புதிய குற்றப்பிரிவு சட்டம் தான் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அதிலும் திருத்தம் கோருவதால், அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, வடமாநிலங்களில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளபோதும், தமிழ்நாட்டிற்கு எந்த பிரச்னையும் இல்லை என விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபடாததால், சீராக விநியோகம் நடைபெறுவதாகவும் கூறினர்.
பழைய தண்டனை சட்டப்பிரிவை விட, பல மடங்கு அதிக சிறை தண்டனை மற்றும், 7 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டால், தெரியாத்தனமாக விபத்தில் சிக்கும் ஓட்டுநர்களின் வாழ்வையே முடக்கிவிடும் என்கிற கூற்றும் முன்வைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, பழைய சட்டப்பிரிவில் குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுனர் சில நாட்களில் ஜாமீன் பெற்று வெளியே வருவதற்கான வாய்ப்பு இருந்ததாகவும், ஆனால், புதிய சட்டப்பிரிவில் அந்த வாய்ப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது.