காவல்துறையில் அதிரடி மாற்றங்கள்... டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான ராதாகிருஷ்ணன், திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அதிகாரி பிரபு சங்கர் உள்ளிட்டோருடன் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடந்த வாரம் ஆலோசனை நடத்தியிருந்தனர். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியிட மாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சொந்த ஊரிலோ அல்லது ஒரே இடத்திலோ 3 ஆண்டுகள் பணியில் இருப்பவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். உதவி ஆய்வாளர் முதல் ஏ.டி.ஜி.பி., பதவி வரை உள்ளவர்களில் ஜூன் 30 ஆம் தேதிக்குள் 3 ஆண்டுகள் பணி நிறைவடையும் அதிகாரிகளின் பட்டியலை தயாரித்து தலைமை அலுவலகத்திற்கு ஜனவரி 10 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்
கணினி வேலைக்காகவும் மற்றும் பயிற்சிக்காகவும் சிறப்பு பிரிவுக்காகவும் பணி அமர்த்தப்பட்டவர்களை இந்த பணி இடமாற்றத்திற்கு உட்படுத்த தேவையில்லை எனவும் டிஜிபி குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளை தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது எனவும், நீதிமன்றங்களில் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ள அதிகாரிகளையும் தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது எனவும் டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். ஓய்வுபெற்று பணி நீட்டிப்பு பெற்ற காவல்துறை அதிகாரிகளையும் பயன்படுத்தக் கூடாது என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.