சூரியனுக்கு அருகில் நிலைநிறுத்தப்படும் ஆதித்யா எல்-1 விண்கலம்.. அடுத்து என்ன செய்யும் Adithya L1 | ஆதித்யா விண்கலனை எல்-1 புள்ளியில் நிலைநிறுத்துவதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறதுசூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், 125 நாட்கள் பயணத்திற்கு பிறகு, சூரியனுக்கு அப்பால் எல்1 புள்ளியில் இன்று மாலை நிலைநிறுத்தப்படுகிறது. இது 5 ஆண்டுகளுக்கு ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் பணியில் இஸ்ரோ களம் இறங்கியுள்ளது. இதன் முதற்படியாக, கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி ஆந்திரப்பிரதேச மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி எக்ஸ்எல் சி57 ராக்கெட் மூலம், ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
அதன் வட்டப் பாதையை உயர்த்துவதற்காக இதுவரை விஞ்ஞானிகள் 4 கட்டப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில், புவிக்கும் சூரியனுக்கும் இடையில் சமபுவி ஈர்ப்பு விசை புள்ளியான லக்ராஞ்சியனை நோக்கி ஆதித்யா எல்-1 பயணித்து வருகிறது. 125 நாட்கள் பயணத்திற்குப் பிறகு, இன்று மாலை 4 மணிக்கு அதனை வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொள்கின்றனர்.
சூரியனை பூமி சுற்றிவரும் போது, அதற்கு ஏற்ப சூரியனை ஆதித்யா விண்கலமும் பின்தொடரும் வகையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. எனவே, சூரியனில் ஏற்படும் மாற்றங்கள், அதனால் நிகழும் விளைவுகளை முன்கூட்டியே பூமியில் இருந்து அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.