சென்னையில் இன்று தொடங்குகிறது உலக முதலீட்டாளர் மாநாடு... ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுமா தமிழ்நாடு
ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கோடு செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் இன்று தொடங்கிறதுதமிழ்நாட்டை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற கொள்கையை நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனடிப்படையில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு முதலீடுகளை ஈர்த்தார். இதன் தொடர்ச்சியாக, சென்னையில் இன்றும் நாளையும் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறுகிறது. இதற்காக நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தகமையத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
300 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பெரிய முதலீடுகள் மட்டுமின்றி சிறு, குறு மற்றும் நடுத்தர துறைகளிலும் முதலீடுகளை கவர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டு நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் தமிழ்நாடு நிறுவனங்களுக்காக தனித்தனியே பெவிலியன்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டை இன்று தொடங்கிவைத்து பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான செயல் திட்டத்தையும் வெளியிட உள்ளார். மேலும், டான்ஃபண்ட் (TANFUND) திட்டத்தையும் துவக்கி வைக்கிறார். இது, உலக அளவில் உள்ள பெரிய முதலீட்டு நிறுவனங்கள், தமிழ்நாட்டில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய உதவும். இதனைத் தவிர்த்து செமிகண்டக்டர் மற்றும் மேம்பட்ட உற்பத்தி கொள்கை, 2024, (Semiconductor and Advanced Manufacturing Policy, 2024) இந்த மாநாட்டில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டில் காலணி தயாரிப்பு, ஆடை தயாரிப்பு, போக்குவரத்து, செமி கண்டக்டர், ஏரோஸ்பேஸ், பாதுகாப்பு துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, காலநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு, எலக்ட்ரானிக்ஸ், வேளாண் மற்றும் உணவு, பொறியியல், மின்சார வாகனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமர்வுகள் நடைபெற உள்ளன. இதில் 170-க்கும் மேற்பட்ட உலக புகழ் வாழ்ந்த வல்லுநர்கள் பங்கேற்கிறார்கள். குறிப்பாக, மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சோம்நாத் உட்பட தேசிய அளவிலும், பல்வேறு நாடுகளின் அரசு அதிகாரிகள், முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோரும் சிறப்புரையாற்றுகிறார்கள்.
சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.