இந்தியாவே வியக்கும் வகையில் முதலீடு ஈர்ப்பு - முதல்வர் ஸ்டாலின் 2024 உலக முதலீட்டாளர் மாநாடு இந்தியாவின் கவனத்தை ஈர்த்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக, சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாடு அமையும் என முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் 2 நாட்களாக நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். நாடே வியக்கும் வகையில் இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இதயத்தில் இடம்பிடித்து விட்டதாக முதல்வர் பாராட்டினார். 2 நாள் மாநாட்டில் 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு கிடைத்துள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டின் 20 ஆண்டு கால வளர்ச்சிக்கு, சென்னை உலக முதலீட்டாளர் மாநாடு அடித்தளமிட்டுள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை தமிழ்நாடு அரசு காப்பாற்றும் என்றும் தெரிவித்தார். முதலீடுகள் செயல் வடிவம் பெறுவதை தொடர்ந்து கண்காணிப்பேன் எனவும் முதலமைச்சர் உறுதிபட தெரிவித்தார். 2024 உலக முதலீட்டாளர் மாநாடு இந்தியாவின் கவனத்தை ஈர்த்ததாகவும், குறிப்பிடத்தக்க முதலீட்டு வருகையைப் பெற்றதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.