ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு "தேவாமிர்தம்".. நோ குடல் ஆபரேஷன்! பழைய சோறே மருந்து
சென்னை: 80 சதவீதம் குடல் நோய்களுக்கு பழைய சோறு நல்ல தீர்வாக அமைவதாக சென்னை ஸ்டான்லி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பழைய சோறும் பச்சை மிளகாயும் அருமையான காம்பினேஷன். அதிலும் கோடை காலத்தில் வயிற்றுக்குள் ஒன்றரை டன் ஏசியை போட்டது போல் குளுகுளு என இருக்கும். இதை தேவாமிர்தம் என்றும் அழைப்பார்கள்.
அந்த காலத்தில் பழைய சோறு, நீராகாரம் உள்ளிட்டவற்றை குடித்துவிட்டுதான் கடுமையான பணிகளை மூதாதையர்கள் மேற்கொண்டனர். இந்த நீராகாரத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. இந்த பழைய சாதத்தை இரவு மிஞ்சும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி அதை காலையில் அந்த தண்ணீருடன் உப்பு போட்டு குடிக்கலாம்.
இந்த உணவுக்கு பெஸ்ட் சைடுடிஷ்- வெங்காயம், பச்சை மிளகாய், ஊறுகாய், மாங்காய் உள்ளிட்டவைதான். இந்த உணவுடன் விருப்பப்பட்டால் மோரோ அல்லது தயிரோ சாப்பிட்டால் போதும். அத்தனை அற்புதமாக இருக்கும். பிரியாணிலாம் கிட்ட கூட நெருங்க முடியாத அளவுக்கு இந்த நீச்சதண்ணீர் சுவையாக இருக்கும். வயிற்றில் இருக்கும் புண்களை ஆற்றுகிறது.
அல்சர் இருப்பவர்கள் பச்சை மிளகாயை எடுத்துக் கொள்ளாமல் வெங்காயத்துடன் இந்த பழங்கஞ்சியை குடிக்கலாம். இது நோய் எதிர்ப்பாற்றலை தருகிறது. மூளை செல்களுக்கு உகந்தது. இரவு முழுக்க அந்த சாதம் நீரில் ஊறினால்தான் சத்து கிடைக்கும். ஒரு சிலர் சாதத்தில் இரவே நிறைய தண்ணீர் ஊற்றிவிட்டு காலையில் அந்த தண்ணீரை வடித்துவிட்டு புதிய தண்ணீரை ஊற்றி குடிப்பர்.அது மிகவும் தவறானது, பலனே அளிக்காது.
ஏழைகள், வறுமையில் இருப்பவர்கள் மட்டுமே இந்த பழைய சோற்றை சாப்பிடுவார்கள். இன்றும் ஹோட்டல்களில் கூட பழைய சோறு, கூழ், களி உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் இந்த பழைய கஞ்சியை மண் பாண்டத்தில் செய்யப்பட்ட பாத்திரத்தில் வைத்து சாப்பிடலாம்.
இந்த பழைய சோறு தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது. அதில் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்த பலருக்கு அறுவை சிகிச்சையே தேவை இல்லை என பரிந்துரைக்கும் அளவுக்கு அளப்பரிய மாற்றத்தை இந்த பழைய சோறு ஏற்படுத்துகிறதாம்.
