அயோத்தி ராமரை மக்கள் தரிசனம் செய்ய இன்று முதல் அனுமதி... அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு
அயோத்தியில் பாலராமர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட நிகழ்வில், ஆயிரக்கணக்கான முக்கிய பிரமுகர்கள் நேற்று பங்கேற்றனர்.ஆனால் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை அயோத்தி ராமர் கோயில் மின்னொளியில் ஜொலித்தது. கோயிலில் செய்யப்பட்டிருந்த சிறப்பு மலர் அலங்காரம் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அமைந்திருந்தது.இதைத் தொடர்ந்து நேற்றிரவு ராமர் கோயிலில், பிரதமர் மோடி , ஜோதி விளக்கு ஏற்றி வழிபட்டார்.
இதனை அடுத்து அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் நடந்த லேசர் கண்காட்சியும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.நேபாளத்தின் ஜனக்புர்தத்தில் உள்ள ஜானகி கோயிலில் பக்தர்கள் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விளக்குகளை ஏற்றி வைத்து ராமர் கோயில் திறப்பு விழாவை வரவேற்றனர்.

இதேபோல் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் விளக்குகளை ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். குறிப்பாக ஒடிசாவில் உள்ள சரோவர் நதிக்கரையில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 111 விளக்குகள் ஏற்றப்பட்டன.உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டன.
சென்னையில் ஜெய் ஸ்ரீராம் கோலமிட்டு விளக்குகளை ஏற்றி பக்தர்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லத்தில் அகல் விளக்கு ஏற்றப்பட்டது.
இன்றுமுதல் பொதுமக்கள் அயோத்தி பாலராமரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் காலை 11.30 மணி வரையும், மதியம் 2.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையும் பாலராமரை தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாலராமரை வழிபடுவதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் அயோத்தியில் குவிந்திருக்கின்றனர். ராமர் சிலையை தரிசிக்க ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்ததால் கோயிலுக்கு வெளியே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

image