புது வெள்ளை மழை.. ஊட்டியில் வாட்டும் உறைபனி!.. நடுங்கும் நீலகிரி மக்கள்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உறைபனி ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை உறைபனியின் தாக்கம் அதிகளவில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டில் நவம்பர் முதல் கடும் மேகமூட்டம் காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்து வந்ததால் உறைபனி ஏற்படவில்லை.
நீர் பனி விழுவதும் தாமதமானது. இந்த நிலையில்தான் கடந்த வாரம் உதகையில் புல் மைதானங்கள், தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம் உள்ளிட்ட இடங்களில் நீர் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள், புற்கள், சாலைகள் மீது உறைபனி அதிகளவில் இருக்கிறது. ஜீரோ டிகிரி வரை வெப்பநிலை பதிவானது. நாட்டின் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. டெல்லியில் கடந்த சில நாட்களாக வெப்ப நிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் சில பகுதிகளிலும் குளிர் அலையால் பனிமூட்டமான நிலை நீடித்தது. ஹரியானாவின் ஹெசாரில் குறைந்தபட்ச வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸாகவும், உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் 1.5 டிகிரி
தமிழ்நாட்டை பொறுத்த அளவில், நீலகிரி மாவட்டத்தில் உறைபனி ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " 27.01.2024 முதல் 30.01.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 31.01.2024: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்த அளவில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இது தவிர மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த அளவில், 28 மற்றும் 29ஆகிய தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்" என்று கூறியுள்ளது.
